ஆங்கில முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிலிருந்து
ஓய்வுபெறும் திரு வேல தனஞ்செயனாகிய
என் அப்பாவை
கடவுளென்றுச் சொல்லி
நான் ஆத்தீகனாக
விரும்பவில்லை..
காரணம்,
அக்கடவுள் கூட சில நேரம்
நான் கேட்டு இல்லை
என்றதுண்டு..!
அவரை
சுமை தாங்கும்
தூணென்றுச் சொல்லி
உயிரற்ற அஃறிணைக்கு
ஒப்பிட விருப்பமில்லை..
அவர் மறைத்த வலிகளை
அவரது மெளனச்
சிந்தனைகளிலும்
தூக்கமற்ற இரவுகளிலும்
சுண்ணக்கோலின் நெடி
தாளாத தும்மல்களிலும்
குரல் கம்மித்
தண்ணீருக்கு தவிக்கும் தருணங்களிலும்
கவனித்திருக்கிறேன்..!
அவர்
சிறந்த ஆசிரியராக
இருக்கலாம்..
ஆனால் மாணவனாக
பார்க்கும் போது
சராசரிக்கும் சற்று
கீழேதான்..
பின்ன,
குள்ளநரித்தனங்களையும்
சூது வாதுகளையும்
கற்றுத் தேராமலே இன்று
ஆசிரியர் பணியை
நிறைவு
செய்யப்போகிறாரே..!
கோழி மிதித்து
குஞ்சுகள் இறப்பதில்லை..
ஆம்,
இன்று கோழிகள்தாம்
குஞ்சுகளுக்கு அஞ்ச
வேண்டியுள்ளது..!
வாத்தியாரை
“வாத்தி”யாக்கிவிட்டார்களே..!
இவரது வீட்டில்மட்டும்
உலகம் அரைமணி நேரம்
முன்னதாகத்தான்
சுற்றும்..
கடிகாரத்தில்
இவர் பண்ணிவைக்கும்
சேட்டையில்
வீட்டிற்கு வருபவர்கள்
குழம்பிப் போனதுதான்
மிச்சம்..!
அவரை நான் செல்லமாக
“பெருச்சாளி”
என்றழைப்பது வழக்கம்..
காரணம்,
என் முதலாம் வகுப்பு
குட்டைப்பாவாடை முதல்
நேற்று இரவு வாங்கிய
மளிகைப்பட்டியல் வரை
ஒன்றுவிடாமல்
எங்கள் வீட்டின் சந்து
பொந்துகளில்
சேகரித்துள்ளார்..!
ஒரு காலத்தில்
தன்னை “தாத்தா”
என்றழைக்காமலிருக்க
மிட்டாய் லஞ்சம்
கொடுத்துக்கொண்டிருந்தவர்
இன்று,
“டேய் கிழவா! என்றென்னை எப்படா
அழைக்கப்போற”
என்று தன் குறிஞ்சிப்
பேத்தியிடம்
கணிப்பொறியின் முன்
தவமிருக்கிறார்..!
என்னை வைத்து மேய்ப்பது
பத்தாதென்று,
தெருவில் சுற்றிக்
கொண்டிருந்த
அப்பு குட்டியையும்
இவர் தலையில்
கட்டிவிட்டேன்..
அவர் வீட்டைவிட்டு
ஒரு ஜான் நகர்ந்தால்
போதும்,
ஊருக்கே கேட்கும்
அதன் ஊளைச் சத்தம்..!
கெட்ட வார்த்தை பேச நா
கூசும்
நம்மூர் பெருசுகளுக்கு
“ஏம்பா! உனக்கு அம்பிள
புள்ள இல்லையா!!”
என்று துக்கம்
விசாரிக்கமட்டும்
உடம்பில் எந்த
சுரணையுள்ள பகுதியும்
கூசியதில்லை..
அவர்களிடம்
இவர் அமைதியாய்
நெஞ்சை
நிமிர்த்திக்கொண்டு கூறுவது,
“ஆம்,
எனக்கு மூன்றும் பெண்
பிள்ளைகள்தான்
என் மனைவியும்
சேர்த்து..!”
அவரெனக்கு
அரணாய்
அமைந்துவிட்டதினால்
அசாத்தியங்களும்
அஸ்தமனங்களும்கூட
என்னை அண்டுவதற்கு அஞ்சி
நிற்கின்றன..
என் தெருக்கோடியில்
சுற்றிக் கொண்டிருக்கும்
அறுந்த வால்களும்
சேர்த்தி..!
என்ன,
ஒரே ஒரு குறைதான்..
அவர் ஆசிரியராய்
இருந்தும்
கஷ்டமெனும்
பாடத்தில்மட்டும்
என்னை பூஜ்ஜியமாகவே
வளர்த்துவிட்டார்..
வாத்தியார் புள்ள
மக்காம்..
இருக்கலாம்..
ஆனால்,
நான் இந்நேரம்
மக்கித்தான்
போயிருப்பேன்
இந்த வாத்தியாரின்
செல்ல மகளாக
பிறவாமல் போயிருந்தால்…!
அப்பாவை நினைத்து நெகிழ்ந்த மகளின் கவிதை அருமை. ஆண் பிள்ளையென்ன, பெண் பிள்ளையென்ன இந்நாட்களில் பெற்றோருக்கு ஆதரவாயிருக்கும் எல்லாப் பிள்ளைகளும் நல்ல பிள்ளைகள்தான். சில சந்தர்ப்பங்களில் ஆண் மகனாகவும், சில சந்தர்ப்பங்களில் பெண் மகளாகவும் இருக்க உங்களால் முடியும்தானே திவ்யா! வாழ்த்துக்கள் உங்கள் கவிதைக்கும், நல்ல ஆசிரியராக... அல்ல... அல்ல... நல்ல மனிதராக விளங்கும் உங்கள தந்தைக்கும்!
ReplyDeleteசில சந்தர்பங்களில் மட்டும் பெண் பிள்ளையாகவும், பல சந்தர்பங்களிலும் ஆண்பிள்ளையாகவே தான் நடக்க பழகிவிட்டேன்.. அப்பெருமையும் இந்த சாரையே சாரும்.. ஹி ஹி:) மிக்க நன்றி அய்யா..!
Deleteஇப்படி ஒரு அப்பாவாக வாழ்ந்துவிட ஆசைதான்.. தங்களைப்போன்ற மகள் கிடைக்கும்போது.
ReplyDelete//உயிரற்ற அஃறிணைக்கு
ஒப்பிட விருப்பமில்லை..// என் நெஞ்சை அசைத்து பார்த்த நிகழ்வு.
//இவரது வீட்டில்மட்டும்
உலகம் அரைமணி நேரம்
முன்னதாகத்தான் சுற்றும்..// மே தினத்தில் சரியான உழைப்பாளியை காட்டிய நிகழ்வு.
//என் முதலாம் வகுப்பு
குட்டைப்பாவாடை முதல்
நேற்று இரவு வாங்கிய
மளிகைப்பட்டியல் வரை
ஒன்றுவிடாமல்
எங்கள் வீட்டின் சந்து பொந்துகளில்
சேகரித்துள்ளார்..!// நானும் இப்படியொரு அப்பாவாக வாழத்தான் ஆசைப்படுகிறேன்.
//“ஆம்,
எனக்கு மூன்றும் பெண் பிள்ளைகள்தான்
என் மனைவியும் சேர்த்து..!”// நல்ல அப்பாவாக மட்டுமல்ல, நல்ல கணவனாகவும் இருப்பதை கண்டுணர்கிறேன்.//
ஆசிரியப்பணி என்பதுதான் ஒரு வலிமை வாய்ந்த, அன்புமயமான உலகை படைக்கக்கூடியது. அதனால்தான் அப்பணி என் சிறுவயது கனவாக இருந்தது மட்டுமல்லாது, விரைவில் நனவாகவும்போகிறது. சிறப்பு வாய்ந்த ஆசிரியப்பணிலிருந்து ஓய்வு பெரும் அப்பாவிற்கு, இது வரை அவர் சமூகத்திற்கு ஆற்றிய அரும்பணிக்கு, சக சமூகவாதியாக நான் எவ்வளவு நன்றி கூறினாலும் தகாதெனினும், அவருக்கு எனது மனமார்ந்த நன்றிகள்! நன்றி!..
மிக்க நன்றி தோழரே.. விரைவிலேயே சிறந்த ஆசிரியராகவும், தந்தையாகவும் வாழ்த்துக்கள்..
Deleteவாத்தியார் புள்ள மக்காம்..
ReplyDeleteஇருக்கலாம்..
ஆனால்,
நான் இந்நேரம்
மக்கித்தான் போயிருப்பேன்
இந்த வாத்தியாரின்
செல்ல மகளாக
பிறவாமல் போயிருந்தால்…!
அழகாகச் சொன்னீர்கள்.
என் நண்பர் சொன்னார்..
வாத்தியார் புள்ள மக்கு மக்குன்னு ஏன் சொல்றாங்கன்னு இன்றுதான் தெரிந்தது என்று.
ஏன் என்று கேட்டேன்.
வாத்தியாருங்க தாம் பாடம் நடத்தும் புள்ளைங்களுக்குச் சொல்லிக்கொடுத்து சொல்லிக்கொடுத்தே தம் புள்ளைங்களை கவனிகாமவிட்டுடுறாங்க என்று.
ஓய்வுபெற்ற ஆசிரியருக்கு என் வாழ்த்துக்கள்.
இது அவரது ஆசிரியப்பணிக்கான ஓய்வாக இருக்கலாம்.
தம் அனுபங்ளை நினைத்துப் பார்க்கவும்.
இளம் தலைமுறையினருக்கு அதனை வழங்கவும் நெறிப்படுத்தவும் நல்ல தொடக்கமாகவும் இருக்கட்டும்.
வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி..!
Deleteஅந்த நல்ல உள்ளத்துக்கு என் வாழ்த்துகள்...
ReplyDeleteநன்றி தோழரே..!
Deleteஓர் உயரிய பணியை நிறைவாகச் செய்துவிட்டு மனமகிழ்ச்சியுடன் ஓய்வு பெற்றிருக்கும் ஒர் ஆசிரியரை நானும் வணங்குகிறேன்.
ReplyDelete//அவரை நான் செல்லமாக
“பெருச்சாளி” என்றழைப்பது வழக்கம்..
காரணம்,
என் முதலாம் வகுப்பு
குட்டைப்பாவாடை முதல்
நேற்று இரவு வாங்கிய
மளிகைப்பட்டியல் வரை
ஒன்றுவிடாமல்
எங்கள் வீட்டின் சந்து பொந்துகளில்
சேகரித்துள்ளார்..!// இந்த வரிகளை ரசித்தேன். ஆண்பிள்ளைகள் இல்லையென்றால் துக்கம்மாதிரி விசாரிப்பது...இன்றும் நடக்கிறது. என்றுதான் மாறுமோ? பெண்பிள்ளைகள் பெற்றவர்கள் பெருமையடைத்தான் செய்வார்கள். பணியிலிருந்துதான் ஓய்வு. இன்னும் வாழ்ந்து பார்க்க உலகில் எத்தனையோ வழிகள் உள்ளன. மனமகிழ்வுடன் அடுத்த இன்னிங்சுக்கு ரெடியாகுங்கள் சார். உங்கள் பேத்தியையும் உங்களை மாதிரி ஆசிரியராக்குங்கள்.
நன்றி..! அவரு காதுல போட்டிட்றேன் அண்ணாத்தே..! :)
Deleteதங்களின் தந்தை பாசம் என்னை நெகிழ வைக்கிறது.அந்த நல்லாசிரியரை நான் வாழ்த்தி வணங்குகிறேன்.
ReplyDeleteமிக்க நன்றி தோழரே..!
Deleteஅப்பா...சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை...அவரை நினைக்கும்போது..கண்ணீர் மட்டுமே மிஞ்சுகிறது..
ReplyDeleteஇந்தக் கவிதைப் படிக்கும்போது இல்லாத என் அப்பா இருப்பதுபோல் இருக்கிறது திவ்யா..
உடலளவில் இல்லையென்றாலும், மனதளவில் நம்முடன் இருந்துகொண்டுதானே இருக்கிறார் அக்கா..! நானும் தலை வணங்குகிறேன்..!
Deleteகவிதை அருமை !
ReplyDeleteவலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு வருகை ! Follower ஆகி விட்டேன். இனி தொடர்வேன். நன்றி !
very expressive
ReplyDeleteஇனிய தந்தையர் தின வாழ்த்துகள்..
ReplyDeleteவலைச்சரம் மூலம் வந்தேன் தொடர்ந்து எழுதுங்கள் தொடர்கிறேன் வாழ்த்துகள்
ReplyDeleteதந்தை பற்றி எழுதியது நல்ல விஷயம் அவருக்கு என் வணக்கங்கள்
தந்தையின் அருமை நமக்கு குழந்தை பிறந்த பின் தான் புரியும் .. இனிய பதிவு .. உங்களை அறிமுக படுத்திய மயிலனுக்கு நன்றி
ReplyDeleteதிவ்யா கவிதைக்கு நல்வாழ்த்து.(வலைச்சரமூலம்)என்வலையில் நிறைய உள்ளது வாசிக்கலாம்..
ReplyDeleteவேதா. இலங்காதிலகம்.
வணக்கம் திவ்யா வலைச்சரம் மூலம் இந்த கவிச்சரத்தை காண வந்தேன், அப்பா பற்றி எவ்வளவு எழுதினாலும் எழுத்தின் மூலம் இந்த பாசத்தின் தாகத்தை தீர்த்திட முடியாது, வரியாய் உங்களின் பாசத்தை நானும் பருகினேன், அற்புதம், தொடருங்கள் சகோ தொடர்கிறோம் :)
ReplyDeleteஅவர் நெஞ்சை நிமிர்த்தி சொன்னது வீணாகப் போவதில்லை தோழி. உங்களின் கவிதையே போதும் அதனை நிரூபிக்க.மகனின் பாதுகாப்புணர்வை உங்கள் தந்தைக்கு கொடுக்குமே..
ReplyDeleteஏன் தொடர்ச்சியாக எழுதுவதை விட்டுவிட்டீர்கள். நேரம் ஒதுக்கிக்கொண்டு மீண்டும் எழுதுங்கள். தங்கள் திறமையை ஏன் முடக்கிக்கொண்டுள்ளீர்கள். ஆவலுடன் எதிர்பாக்குறேன்.
ReplyDelete