தமிழ்த்தேன் அருந்த அழைக்கிறாள்

தமிழ்த்தேன் அருந்த அழைக்கிறாள்

Tuesday, May 1, 2012

என்ன தவம் செய்தேன்..

ஆங்கில முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிலிருந்து ஓய்வுபெறும் திரு வேல தனஞ்செயனாகிய 
 
என் அப்பாவை
கடவுளென்றுச் சொல்லி
நான் ஆத்தீகனாக விரும்பவில்லை..
காரணம்,
அக்கடவுள் கூட சில நேரம்
நான் கேட்டு இல்லை என்றதுண்டு..!

அவரை
சுமை தாங்கும்
தூணென்றுச் சொல்லி
உயிரற்ற அஃறிணைக்கு
ஒப்பிட விருப்பமில்லை..
அவர் மறைத்த வலிகளை
அவரது மெளனச் சிந்தனைகளிலும்
தூக்கமற்ற இரவுகளிலும்
சுண்ணக்கோலின் நெடி தாளாத தும்மல்களிலும்
குரல் கம்மித் தண்ணீருக்கு தவிக்கும் தருணங்களிலும்
கவனித்திருக்கிறேன்..!

அவர்
சிறந்த ஆசிரியராக இருக்கலாம்..
ஆனால் மாணவனாக பார்க்கும் போது
சராசரிக்கும் சற்று கீழேதான்..
பின்ன,
குள்ளநரித்தனங்களையும்
சூது வாதுகளையும்
கற்றுத் தேராமலே இன்று
ஆசிரியர் பணியை
நிறைவு செய்யப்போகிறாரே..!

கோழி மிதித்து
குஞ்சுகள் இறப்பதில்லை..
ஆம்,
இன்று கோழிகள்தாம்
குஞ்சுகளுக்கு அஞ்ச வேண்டியுள்ளது..!
வாத்தியாரை
“வாத்தி”யாக்கிவிட்டார்களே..!

இவரது வீட்டில்மட்டும்
உலகம் அரைமணி நேரம்
முன்னதாகத்தான் சுற்றும்..
கடிகாரத்தில்
இவர் பண்ணிவைக்கும் சேட்டையில்
வீட்டிற்கு வருபவர்கள்
குழம்பிப் போனதுதான் மிச்சம்..!

அவரை நான் செல்லமாக
“பெருச்சாளி” என்றழைப்பது வழக்கம்..
காரணம்,
என் முதலாம் வகுப்பு
குட்டைப்பாவாடை முதல்
நேற்று இரவு வாங்கிய
மளிகைப்பட்டியல் வரை
ஒன்றுவிடாமல்
எங்கள் வீட்டின் சந்து பொந்துகளில்
சேகரித்துள்ளார்..!

ஒரு காலத்தில்
தன்னை “தாத்தா” என்றழைக்காமலிருக்க
மிட்டாய் லஞ்சம் கொடுத்துக்கொண்டிருந்தவர்
இன்று,
“டேய் கிழவா! என்றென்னை எப்படா அழைக்கப்போற”
என்று தன் குறிஞ்சிப் பேத்தியிடம்
கணிப்பொறியின் முன் தவமிருக்கிறார்..!

என்னை வைத்து மேய்ப்பது
பத்தாதென்று,
தெருவில் சுற்றிக் கொண்டிருந்த
அப்பு குட்டியையும்
இவர் தலையில் கட்டிவிட்டேன்..
அவர் வீட்டைவிட்டு
ஒரு ஜான் நகர்ந்தால் போதும்,
ஊருக்கே கேட்கும்
அதன் ஊளைச் சத்தம்..!

கெட்ட வார்த்தை பேச நா கூசும்
நம்மூர் பெருசுகளுக்கு
“ஏம்பா! உனக்கு அம்பிள புள்ள இல்லையா!!”
என்று துக்கம் விசாரிக்கமட்டும்
உடம்பில் எந்த சுரணையுள்ள பகுதியும்
கூசியதில்லை..
அவர்களிடம்
இவர் அமைதியாய்
நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு கூறுவது,
“ஆம்,
எனக்கு மூன்றும் பெண் பிள்ளைகள்தான்
என் மனைவியும் சேர்த்து..!”

அவரெனக்கு
அரணாய் அமைந்துவிட்டதினால்
அசாத்தியங்களும் அஸ்தமனங்களும்கூட
என்னை அண்டுவதற்கு அஞ்சி நிற்கின்றன..
என் தெருக்கோடியில் சுற்றிக் கொண்டிருக்கும்
அறுந்த வால்களும் சேர்த்தி..!

என்ன,
ஒரே ஒரு குறைதான்..
அவர் ஆசிரியராய் இருந்தும்
கஷ்டமெனும் பாடத்தில்மட்டும்
என்னை பூஜ்ஜியமாகவே
வளர்த்துவிட்டார்..

வாத்தியார் புள்ள மக்காம்..
இருக்கலாம்..
ஆனால்,
நான் இந்நேரம்
மக்கித்தான் போயிருப்பேன்
இந்த வாத்தியாரின்
செல்ல மகளாக
பிறவாமல் போயிருந்தால்!

Monday, April 9, 2012

அன்புள்ள அம்மாவுக்கு..


தவணை முத்தம் 2:
 


இரண்டாவது
பிறந்ததும்
பெண்ணென்று
ஊரில் எவரும்
என்னை
எட்டிக் கூட
பார்க்கவில்லை..

நான்
பத்தோடு
பதினொன்னாக
பிறந்திருந்தாலும்
உன்னுள்
ஊற்றெடுக்கும்
அமுதும் அன்பும்
ஒரு துளிகூட
குறைந்ததில்லை..!
அதற்கு..

Friday, March 30, 2012

ரசனைகள் பலவிதம்

விண்ணைத்தாண்டி
நான் வருகிறேன்..
முதல்காதலைத் தாண்டி
நீ வருகிறாய்
என்றால்..

வற்றிவிட்டதாய்
நீ நம்பிக்கொண்டிருக்கும்
உன் இதயத்தில்
ஒரு துளி
ஈரம் கூடவா
எனக்கு மிச்சமில்லை..

மொளனம் பேசியதாய்
நினைத்துக்கொண்டு
எனக்கு நானே
தப்பான அர்த்தம்
கண்டுவிட்டேனோ..!

தென்மேற்கில்
மையம் கொண்ட
பருவக்காற்றுக்கு
ஏனோ
மழைத்தர
இன்றும் மனமில்லை..

தெருத்தெருவாகத்
அங்காடியில்
தேடிக் கொண்டிருக்கிறேன்
நீ உசிரையே
வைத்திருப்பாதாய் சொன்ன
அந்த சிறுபொம்மையை..

அரவமேயின்றி
என் மனதின்
சந்து பொந்துகள்
அனைத்திலும்
ஊடுருவும்
அரவாணே..

வாகை சூட
வருகிறேன்
உன்னுடன் சேர்ந்து
வாழ்வை
ஆட்சி புரிவதாயின்..

அலைப்பாய்கின்ற
மனதை
கட்டுப்படுத்திவிடத்தான்
தவிக்கிறேன்..

உனது அறியாமை
எனது இயலாமைக்கு
அஞ்சலி
செலுத்தும் முன்..!

Saturday, March 17, 2012

அன்புள்ள அம்மாவுக்கு..


தவணை முத்தம் 1 :


நீ லேசாய்
பட்டும் படாமலும்
ஒரு தட்டு தட்டியதற்கு
ஒன்பது மணிநேரம்
உண்ணாவிரதம்
நடித்திருக்கிறேன்..

நீயோ
நான் முதன்முதலில்
கருவில் உன்னை
எட்டி உதைத்ததற்கு
ஊர்க்கூட்டி
ஆர்ப்பரித்தாயே
அதற்கு..!

Tuesday, March 13, 2012

அவ(ள்)ன்


ஒரு பெண்ணிடம் ஆணின் குணங்கள் கண்டால்
1000-ல் ஒருத்தி என்கிறார்கள்..
ஏனோ,
ஒரு ஆணாக அறியப்பட்டவனிடம்
பெண்ணின் குணங்கள் கண்டால் மட்டும்
10-ல் ஒன்றை கழி என்கிறார்கள்..
கூட்டிக் கழித்தும் பார்த்துவிட்டேன்
கணக்கு சரியாக வரவில்லையே!

தாயோ தாரமோ வீரம் கொண்டால்
அதில் பூரிப்பு..
தகப்பனோ தமயனோ தாய்ப்பாசம் தந்தால்
அதில் பேருவப்பு..
இயற்கையாய் ‘இவர்’கள் நளினம் கொண்டால்மட்டும்
அதில் அருவருப்பு..
உட்கார்ந்து யோசித்தாலும்
இப்புதிர் எனக்கு விளங்கவில்லையே!