தமிழ்த்தேன் அருந்த அழைக்கிறாள்

தமிழ்த்தேன் அருந்த அழைக்கிறாள்

Friday, March 30, 2012

ரசனைகள் பலவிதம்

விண்ணைத்தாண்டி
நான் வருகிறேன்..
முதல்காதலைத் தாண்டி
நீ வருகிறாய்
என்றால்..

வற்றிவிட்டதாய்
நீ நம்பிக்கொண்டிருக்கும்
உன் இதயத்தில்
ஒரு துளி
ஈரம் கூடவா
எனக்கு மிச்சமில்லை..

மொளனம் பேசியதாய்
நினைத்துக்கொண்டு
எனக்கு நானே
தப்பான அர்த்தம்
கண்டுவிட்டேனோ..!

தென்மேற்கில்
மையம் கொண்ட
பருவக்காற்றுக்கு
ஏனோ
மழைத்தர
இன்றும் மனமில்லை..

தெருத்தெருவாகத்
அங்காடியில்
தேடிக் கொண்டிருக்கிறேன்
நீ உசிரையே
வைத்திருப்பாதாய் சொன்ன
அந்த சிறுபொம்மையை..

அரவமேயின்றி
என் மனதின்
சந்து பொந்துகள்
அனைத்திலும்
ஊடுருவும்
அரவாணே..

வாகை சூட
வருகிறேன்
உன்னுடன் சேர்ந்து
வாழ்வை
ஆட்சி புரிவதாயின்..

அலைப்பாய்கின்ற
மனதை
கட்டுப்படுத்திவிடத்தான்
தவிக்கிறேன்..

உனது அறியாமை
எனது இயலாமைக்கு
அஞ்சலி
செலுத்தும் முன்..!

Saturday, March 17, 2012

அன்புள்ள அம்மாவுக்கு..


தவணை முத்தம் 1 :






நீ லேசாய்
பட்டும் படாமலும்
ஒரு தட்டு தட்டியதற்கு
ஒன்பது மணிநேரம்
உண்ணாவிரதம்
நடித்திருக்கிறேன்..

நீயோ
நான் முதன்முதலில்
கருவில் உன்னை
எட்டி உதைத்ததற்கு
ஊர்க்கூட்டி
ஆர்ப்பரித்தாயே
அதற்கு..!

Tuesday, March 13, 2012

அவ(ள்)ன்


ஒரு பெண்ணிடம் ஆணின் குணங்கள் கண்டால்
1000-ல் ஒருத்தி என்கிறார்கள்..
ஏனோ,
ஒரு ஆணாக அறியப்பட்டவனிடம்
பெண்ணின் குணங்கள் கண்டால் மட்டும்
10-ல் ஒன்றை கழி என்கிறார்கள்..
கூட்டிக் கழித்தும் பார்த்துவிட்டேன்
கணக்கு சரியாக வரவில்லையே!

தாயோ தாரமோ வீரம் கொண்டால்
அதில் பூரிப்பு..
தகப்பனோ தமயனோ தாய்ப்பாசம் தந்தால்
அதில் பேருவப்பு..
இயற்கையாய் ‘இவர்’கள் நளினம் கொண்டால்மட்டும்
அதில் அருவருப்பு..
உட்கார்ந்து யோசித்தாலும்
இப்புதிர் எனக்கு விளங்கவில்லையே!

Tuesday, March 6, 2012

பொம்மலாட்டம்


விவரம் தெரிந்தது முதல்
அம்மா சொல்லிச் சொல்லி வளர்க்கிறாள்
“என்னதான் நீ
நம்ம வீட்டு செல்லமா இருந்தாலும்
இன்னொருத்தர் வீட்டுல வாக்கப்பட போரவ” னு..

என் நலம் கருதும்
தோழி சொல்லி வருந்துகிறாள்,
“என்னாதான் நீ
ஆண் பெண் பேதம் பாக்காம பழகினாலும்
புருஷனுக்குப் பிடிக்காட்டி விட்டுத்தான் ஆகணும்”னு..

திரையிலும் வெட்டிப்பேச்சுகளிலும்
பெண்ணுரிமைப்பற்றிச் சிலாகிக்கும் கணவர்கள்
நான்குச் சுவர்களுக்குள் குசுகுசுப்பது,
“என்னதான் நீ படிச்சு கிழிச்சி வேலைக்கு போனாலும்
வீட்டுல நா சொல்றதத்தான் கேட்டாகணும்”னு..

தாயின் பாச பலவீனமறிந்த
கில்லாடிப் பிள்ளைகள் உறுதிக்கூறுவது,
“என்னதான் அம்மா முதல்ல முரண்டுபுடிச்சாலும்
போகப்போக நம்ம காதல ஏத்துக்குவாங்க” னு..

ஒவ்வொரு முறையும்
தன் மனசாட்சிக்கு
அவள் கூறிக்கொள்ளும் ஆறுதல் ஒன்றுதான்.
“என்னதான் நீ வாழப்பிறந்தவளாயினும்
நீ ஆடித்தான் ஆகவேண்டும்
பொம்மலாட்டம்”னு..!