தமிழ்த்தேன் அருந்த அழைக்கிறாள்

தமிழ்த்தேன் அருந்த அழைக்கிறாள்

Tuesday, March 6, 2012

பொம்மலாட்டம்


விவரம் தெரிந்தது முதல்
அம்மா சொல்லிச் சொல்லி வளர்க்கிறாள்
“என்னதான் நீ
நம்ம வீட்டு செல்லமா இருந்தாலும்
இன்னொருத்தர் வீட்டுல வாக்கப்பட போரவ” னு..

என் நலம் கருதும்
தோழி சொல்லி வருந்துகிறாள்,
“என்னாதான் நீ
ஆண் பெண் பேதம் பாக்காம பழகினாலும்
புருஷனுக்குப் பிடிக்காட்டி விட்டுத்தான் ஆகணும்”னு..

திரையிலும் வெட்டிப்பேச்சுகளிலும்
பெண்ணுரிமைப்பற்றிச் சிலாகிக்கும் கணவர்கள்
நான்குச் சுவர்களுக்குள் குசுகுசுப்பது,
“என்னதான் நீ படிச்சு கிழிச்சி வேலைக்கு போனாலும்
வீட்டுல நா சொல்றதத்தான் கேட்டாகணும்”னு..

தாயின் பாச பலவீனமறிந்த
கில்லாடிப் பிள்ளைகள் உறுதிக்கூறுவது,
“என்னதான் அம்மா முதல்ல முரண்டுபுடிச்சாலும்
போகப்போக நம்ம காதல ஏத்துக்குவாங்க” னு..

ஒவ்வொரு முறையும்
தன் மனசாட்சிக்கு
அவள் கூறிக்கொள்ளும் ஆறுதல் ஒன்றுதான்.
“என்னதான் நீ வாழப்பிறந்தவளாயினும்
நீ ஆடித்தான் ஆகவேண்டும்
பொம்மலாட்டம்”னு..!

12 comments:

  1. அவள் வாழப்பிறந்தவள்தான். ஆனாலும் அவள் வாழ்க்கையைப் பிறர் வாழ.... வேடிக்கை மட்டுமே பார்த்திருக்கமுடிகிறது பல சமயங்களில். யதார்த்தம் பேசும் கவிதை. பாராட்டுகள்.

    ReplyDelete
  2. சொந்த விருப்பங்கள், அபிலாஷைகள் எல்லாவற்றையும் மறைத்துக் கொண்டு பலவிதமான முகமூடிகளை அணிந்துதான் பெண்கள் வாழ வேண்டி உள்ளது. நட்பு முதற் கொண்டு சின்னச் சின்ன ரசனைகளான படித்தல், மழையில் நனைதல், வாண்டுகளுடன் கொட்டமடித்தல் என எத்தனை விஷயங்களை விட்டுத்தந்து Compromoise செஞ்சுக்க வேண்டியிருக்கு. நிஜத்தை உரத்து உரைத்த அழகுத் தமிழ்க் கவிதைம்மா. என் இதயம் நிறைந்த பாராட்டுக்களும், நல்வாழ்த்துக்களும்!

    ReplyDelete
  3. பொம்மலாட்டம் ...சரிதான்..அப்படியே word verification எடுத்து விடுங்கள் ..கமெண்ட் போடவே நாங்க ரொம்ப சோம்பேறி...இதுல இதையும் செய்யனுமா ...அப்புறம் உங்க ஏரியா பக்கம் வந்தாலும் கமெண்ட் பாக்ஸ் பக்கம் திரும்ப கூட மாட்டோம்...அம்புட்டுதான்...( அடப்பாவி..கவிதைக்கு கூட இவ்ளோ வார்த்தைகளில் எதுவும் சொல்லல அப்படின்னு நினைக்க கூடாது )

    ReplyDelete
  4. நீக்கியாச்சு..! வருகைக்கும் கருத்திற்கும் நன்றி தோழரே..!

    ReplyDelete
  5. உண்மையை சொல்லிப் போகிறது கவிதை..சிறப்பு.தொடருங்கள். வாழ்த்துகள்.

    ReplyDelete
  6. பெண்கள் பொம்மலாட்டம் என்ற கருத்து சரிதான். ஆனால் இன்று கணவன்தான் தலையினை ஆட்டும் பொம்மையாக இருக்கிறான்.

    ReplyDelete
  7. சரிதான்..! ஆனாலென்ன, நான் பெரும்பான்மையின் பக்கம், நீங்க சிறுபான்மையின் பக்கம்..!:)

    ReplyDelete
  8. யதார்த்தம் பேசும் கவிதை. பாராட்டுகள்.

    ReplyDelete
  9. எப்படி இத்தனை நாள் தங்கள் பதிவுகள்
    கண்ணில் படாமல் போனது ?
    வித்தியாசமான சிந்தனையும்
    சொல்லிச் செல்லும் விதமும் மிக மிக அருமை
    தங்கள் பதிவுகளை தொடர்வதில் பெருமிதம் கொள்கிறேன்
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete

நில்லுங்க.. சொல்லுங்க.. செல்லுங்க.. (நன்றிங்க!!!)