தமிழ்த்தேன் அருந்த அழைக்கிறாள்

தமிழ்த்தேன் அருந்த அழைக்கிறாள்

Monday, January 30, 2012

உற்றுப்பாரடி..


ஒன்றுசேர்த்து விட்டதாய்
மார்தட்டிக் கொண்டிருக்கிறேன்,
என் இதயம்
வெட்கமற்று காட்டிக் கொண்டிருப்பது
உடைத்தவனின் பிம்பத்தை
என்று அறியாமல்..!

Sunday, January 29, 2012

வணக்கமுங்க!


             இந்த வலைப்பூ இன்று இங்கு பூப்பதற்கு ஊக்கமெனும் நீரூற்றிய அனைத்து பாசக்கார உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றி. வெறும் கண்ணாமூச்சி விளையாட்டிற்காக எழுத ஆரம்பித்தேன். ஆட்டத்தின் முடிவில் நான் கண்டுபிடித்தது, எனக்குள் உறைந்துபோய்க் கிடந்த தமிழ்த் தாகத்தை.
             எழுத வேண்டுமென்ற ஆசை மட்டும்தான். வலைப்பூ தொடங்குவதில் அவ்வளவாக நாட்டமில்லை. சரியாகச் சொல்ல வேண்டுமானால் துணிவில்லையென்று தான் கூற வேண்டும். காரணம், நான் எட்டிப்பார்த்த பூந்தோட்டங்களில் பூத்திருந்த வலைப்பூக்கள் பெரும்பான்மையாக எஜமானர்களுக்கு சொந்தமானவையே. ஆகவே, இங்கே எஜமானிக்கள் வெகுக்குறைவுதானென்று நானே முடிவுகட்டி, நமக்கெதுக்கு வீண்வம்பென்று இருந்துவிட்டேன். அப்புறம், இந்த தேன்சிட்டு எப்படி வந்தாளென்று தானே யோசிக்கிறீர்கள். (சரி, சரி நீங்க ஸ்ஸ்ஸபா-ங்குறது எனக்கும் கேட்கிறது. சுருக்கமாக முடித்துக் கொள்கிறேன்.)
               என் வருடலுக்கெட்டிய முதல் வலைப்பூ மயிலிறகு” தான்.cmayilan.blogspot (இதன்மேல் தட்டுங்கள்,திறக்கப்படும்). இதற்குமுன், மழைக்காகக் கூட நான் கவிதைக்குடைகளுக்குள் ஒதுங்கியதில்லை. மாருத்துவ மேற்படிப்பு நுழைவுத்தேர்வுகளுக்காக புத்தகப்புழுவாகிக் காய்ந்துபோய்க்கிடந்த எனக்கு, மயிலிறகின் படைப்புகள் கம்மஞ்சோலைப்போலத்தான் ஆகிவிட்டது.
             மயிலிறகின் பார்வை மூலம் மற்ற வலைப்பூக்கலையும் ரசிக்கலானேன். படிக்கத் தூண்டியதுடன் நில்லாமல், எழுதும் ஆவலையும் கிளப்பிவிட்டது. இப்படியாக என் கண்ணில் பட்டதுதான் “தெங்காசித் தமிழ்ப் பைங்கிளி” thenkasi thamizh paingiliயின் வலைப்பூ. எஜமானிக்களும் இருக்கிறார்கள் என்ற உண்மை ஒரு பக்கம் உரைக்க, நாமும் ஒரு வலைப்பூ தொடங்கித்தான் பார்ப்போமே என்ற குறுகுறுப்பும் தொற்றிக்கொண்டது. என்னைக் கவர்ந்த இவ்விரு பூக்களும் சிறகாடையில் வலம்வருவதைக்கண்டு, என் மனப்பட்சிக்கும் அவ்வாசை வந்துவிட்டது. நமக்கு எந்தப் பட்சி சரிவருமென்று யோசித்தேன். என் தாத்தா எனக்கு வைத்த செல்லப்பெயரான “தேன்மொழி”யுடன், ஏறக்குறைய என்னைப்போலவேயிருக்கும் சிட்டையும் (ஹி.. ஹி..) சேர்த்து, “தேன்சிட்டு” ஆக்கிவிட்டேன்.
              இதுவே, தேன்சிட்டு தமிழ்த்தேன் பருக ஆரம்பித்ததின் கதைச்சுருக்கம். நான் தமிழ்வெறியை அல்ல, தமிழ்ப்பிரியை மட்டுமே. எனக்குத் தெரிந்த எளியத் தமிழில், இந்த சிட்டின் கண்ணோட்டத்தை பகிர்ந்து கொ(ல்)ள்கிறேன்.
              இப்படி என்னை உசுப்பேத்தி ரணகளத்தில்விட்டு புண்ணியம் (அல்லது பாவமோ, முடிவெடுப்பது உங்கள் பாடு) கட்டிக்கொண்ட அனைவருக்கும் (நான் ஒரு ‘க்’கிற்கு புள்ளிவைப்பதைக்கூட ஆஹா ஓஹோவென்று பாராட்டும் என் பெற்றோரும் சேர்த்தி) வணக்கம் கூறி, என்னுடன் சேர்ந்து தமிழ்த்தேன் பருகிச் சிறகடிக்க வரவேற்கின்றேன்.

Wednesday, January 25, 2012

எனக்கும் சற்று நேரம் ஒதுக்கு

என் இதழோர மச்சம்
கண்டு ரசித்தாய்..
கன்னக் குழியில்
சறுக்கி விளையாடினாய்..
அலைக் கூந்தலில்
நீந்தி மகிழ்ந்தாய்..
அன்பின் கதகதப்பில்
கரைந்து உருகினாய்..
இதற்கே உனக்கு நேரம்
சரியாக இருக்க,
கவனிக்கத் தோன்றவில்லை போலும்
எனக்குள் நித்தமும் மறுகிக் கொண்டிருக்கும்
“சராசரி” என்னை..!!!

நினைவுப் பரிசு


மறையவில்லை இன்னும்
அவன் அறைந்த கையின் ரேகைகள்..

உலரவில்லை இன்னும்
இவள் கன்னத்தில் கண்ணீர்க் கோடுகள்..

வெளிவரவில்லை இன்னும்
அவன் இவள் கருவில் விட்டுச்சென்ற
எட்டு மாத இரட்டை சிசுக்கள்..

அதற்குள்,
பறித்தாகிவிட்டது
இவளது பூவையும் பொட்டையும்..

உடைத்தாகிவிட்டது
கைகளில் சிணுங்கும் வளையல்களை..

கொடுத்தாகிவிட்டது
விதவை எனும் பட்டத்தை..

அன்றுதான் போய்ச் சேர்ந்துவிட்டிருந்த
குடிகாரக் கணவனின் ஞாபகமாக
இச்சமுதாயம் அவளுக்குத் தரும்
நினைவுப் பரிசு..!!!

சொல்லிவிடு..


வானத்து நிலாவென்றது
தொலைவில் வைத்து ரசிக்கத்தானா..

சிற்பிக்குள் முத்தென்றது
பூட்டி வைத்து பூஜிக்கத்தானா..

கல் சிற்பமென்றது
உனதாசைக்கேற்ப எனை செதுக்கத்தானா..

அழகோவியம் என்றது
உன் தீண்டலில் சிவந்த தேகத்தை தானா..

காதலித்தேன் என்றது
நானென்று நீ நினைத்துக்கொண்ட
உன் கற்பனையைத்தானா..!

யாரைக் குற்றஞ்சொல்வது..


அசைந்தாடிக் கொண்டிருந்தாள்
அழகிய நாணலாய்..
வருடிக் கொண்டு வந்தான்
மென் தென்றலாய்..
அவள் வளைந்தாடியதை ரசித்தான்
சில காலம்..
எவ்வளவுதான் வளைகிறாள் பார்ப்போமென்று
வளைத்துப்பார்த்தான் போலும்..
எல்லை மீறி ஆட்டுவித்ததில்
வேருடன் சரிந்துவிட்டாள் அவள்..
இன்று,         
உயிறற்றுக் கிடக்கும் “வெற்றுக் குச்சி”க்கு
மனமுருகி மழைக்காக வேண்டுகிறான்,
அவளை மீண்டும் துளிர்க்க வைக்கும்
நப்பாசையில்!!!
ஹிம்ம்ம்.. கண்கெட்ட பின்
சூர்ய தரிசனம்!!!

நுழைவுக்கட்டணம்


உன் நினைவுகளின்
திடீர் ஆக்கிரமிப்பின் விளைவு..
எனது ‘அச்சம் மடம் நாணம்’ அனைத்தும்
முறுக்கிக்கொண்டு வெளிநடப்பு செய்துவிட்டன..
எஞ்சியிருந்த நம்பிக்கை ஒன்றும்
உன் அலட்சியப் புன்னகையால்
இன்று அவசர சிகிச்சை பிரிவில்..
நியாயம் கேட்க
உன் மனம் தேடி வந்தால்,
என்னைத் துறந்த ‘அவற்றை’ கேட்கின்றாய்,
நுழைவுக்கட்டணமாய்!

அது இது எது


ஆசைக்கு தாத்தா பாட்டி
வச்ச பேரு..

இராசிக்கு ஆத்தா அப்பன்
வச்ச பேரு..

சேட்டைக்கு உடன்பிறப்புகள்
வச்ச பேரு..

கேலிக்கு நண்பர்கள்
வச்ச பேரு..

இங்கிதம் கருதி அக்கம் பக்கத்துல
வச்ச பேரு..

இதெல்லாம் பத்தாதென்று
அவன் பேர துணைப்பெயராக சேர்த்துக்க
இதுக்கு ஆசைய பாரு..

ஒரு வேள,
இதுக்கு பேரு தான் அதுவோ..!!!

Tuesday, January 24, 2012

அவளால் முடிந்தது


பெண்ணிற்கும் உண்டு காதல் தோல்வி

ஆனாலும்,
இவள் ஆறுதல் தேடியதில்லை
மதுவிலோ போதையிலோ..

இவள் பரிதாபம் எதிர்பார்த்ததில்லை
மாப்ள-மச்சான் நண்பர்களிடத்தில்...

இவள் சோகத்தை மறந்ததில்லை
கானா மெட்டுக்கள் பாடி..

இவள் பழி சுமத்தியதில்லை
ஒட்டுமொத்த ஆண்கள் வர்க்கமே மோசமென்று..

இவள் கவனிக்கத் தவறியதில்லை
கேட்கக் கூசும் விமர்சனங்களை..


இவளுக்கு தெரிந்தது, முடிந்தது,
அனுமதிக்கப்பட்டது
எல்லாம் வெறும்
“தலையணை நனைத்தல்” மட்டுமே...!!!